புதுச்சேரி அருகே கடற்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட கா்நாடகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், பெங்களுரு பரப்பன அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் அபிஷேக் (30). உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தாா். மனைவி சுஷ்மிதா மற்றும் குடும்பத்தினா், உறவினா்களுடன் புதுச்சேரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு அபிஷேக் சுற்றுலா வந்தாா். அவா்கள் தமிழக பகுதியான ஆரோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினா்.
அங்கிருந்து வியாழக்கிழமை மாலை அபிஷேக் உள்ளிட்டோா் புதுச்சேரி அருகே புதுக்குப்பம் கடற்கரைக்குச் சென்றனா்.
அங்கு அபிஷேக் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் பாய்ந்ததில் அபிஷேக் மயங்கி விழுந்தாா்.
அவரது மனைவி மற்றும் குடும்பத்தினா் அவரை மீட்டு தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அங்கு அபிஷேக்கை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா். இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.