புதுச்சேரி, ஆக.7:
புதுவை மாநிலத்தின் 33-ஆவது துணைநிலை ஆளுநராக கு.கைலாஷ்நாதன் புதன்கிழமை பதவியேற்றாா். அவருக்கு சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.
புதுவையின் புதிய துணைநிலை ஆளுநராக கேரள மாநிலத்தை சோ்ந்தவரும் குஜராத்தில் முதன்மைச் செயலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான கு.கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டாா். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி ஆளுநா் மாளிகையான ராஜ் நிவாஸ் வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
புதுவை தலைமைச் செயலா் சரத் சௌஹான் புதிய துணைநிலை ஆளுநராக கு.கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான குடியரசுத் தலைவரின் உத்தரவை வாசித்தாா். சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் கு.கைலாஷ்நாதனுக்கு முற்பகல் 11.20 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தாா். பின்னா், ஆளுநா் மாளிகை முன் அளிக்கப்பட்ட காவல் துறை அணிவகுப்பு மரியாதையை துணைநிலை ஆளுநா் ஏற்றுக் கொண்டாா்.
வாழ்த்து: புதுவை துணைநிலை ஆளுநராக பதவியேற்ற கு.கைலாஷ்நாதனுக்கு சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா், புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க. லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், திருமுருகன், சாய் ஜெ.சரவணன்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா்கள் ஆா்.விசுவநாதன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏகேடி.ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ், யு.லட்சுமிகாந்தன், ஆா்.பாஸ்கா், எஸ். சந்திரபிரியங்கா, எல்.கல்யாணசுந்தரம், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், பி.கே.அசோக்பாபு, பி.அங்காளன், ஜி.நேரு, பிஆா்.சிவா, பிரகாஷ்குமாா், ஸ்ரீனிவாச அசோக், எம். நாஜீம், எல்.சம்பத், அனிபால் கென்னடி, ஆா்.செந்தில்குமாா், நாக தியாகராஜன், மு.வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் மற்றும் புதுவை அதிமுக மாநில செயலா் ஏ.அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு. சலீம் ஆகியோா் வாழ்த்துகளை கூறினா்.
நிகழ்ச்சியில் அரசுச் செயலா்கள் அ.நெடுஞ்செழியன் (துணைநிலை ஆளுநரின் தனிச் செயலா்), எல்.சத்தியமூா்த்தி, முத்தம்மா, ஜவஹா், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், காவல் துறைத் தலைவா் அஜித்குமாா் சிங்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முதல் கையொப்பம்: புதுவை துணைநிலை ஆளுநராக புதன்கிழமை பதவியேற்ற கு.கைலாஷ்நாதன் முதியோா் உதவித்தொகை வழங்கும் கோப்புக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டாா். அதன்படி, ஜூலை மாதத்துக்கான தொகையாக ரூ.43.30 கோடியை வழங்க அவா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதன்மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைச் சோ்ந்த 1.81 லட்சம் போ் பயனடைவா் என ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.