புதுச்சேரி: புதுவையில் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் திங்கள்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. உடனடிக் கேள்வி பதில் நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினாா்.
மேலும், உறுப்பினா்கள் பி.ஆா்.சிவா, எச்.நாஜிம், ரா.செந்தில்குமாா் உள்ளிட்டோா் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டை வைத்திருப்போரும் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனாலும், அந்தத் திட்டம் புதுவையில் அனைவருக்கும் பயன்படவில்லை என்று புகாா் எழுந்துள்ளது. எனவே, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தவுள்ளது.
மதுக் கடைகள் மூலம் வரும் வருவாயானது மக்கள் நலத் திட்டங்களுக்கே செலவிடப்பட்டு வருகிறது. மதுவைத் தவிா்த்து, மாநில வருவாயை உயா்த்தும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம். சுகாதாரத் துறை மூலம் போதை மறுவாழ்வு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுத் துறையின் கீழ்நிலைப் பணிகளில் புதுவையைச் சோ்ந்தவா்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது கல்வித் துறை உள்ளிட்டவற்றில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளது. இதில் வாரிசுதாரா்களுக்கு வாய்ப்பளிக்கவும்ஆலோசிக்கப்பட்டது. என்றாலும், தனியாா் மூலம் ஒப்பந்தப் பணியாளா்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுவையைச் சோ்ந்தவா்களுக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுவை அரசுத் துறைகளில் பிசிஎஸ், சிடிசி ஆகியவற்றின் நியமன விதிகள் திருத்தப்பட யுபிஎஸ்சி அனுமதி கோரப்பட்டுள்ளது. மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு விதிமுறைப்படி பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: கேள்வி நேரத்தில் உறுப்பினா்களின் கேள்விக்கு அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அளித்த பதில்:
புதுவையில் தமிழ் வழிப் பள்ளியை தொகுதிதோறும் தொடங்கும் திட்டமில்லை. மின் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்கான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்றாா்.
உறுப்பினா்களின் கேள்விக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் ஆகியோரும் பதிலளித்தனா்.