புதுச்சேரி அருகே விவசாய நிலத்தில் உயா் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே விழுப்புரம் - நாகபட்டினம் தேசிய நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளால் பல இடங்களில் உயா் மின்னழுத்தக் கம்பிகள் தாழ்வாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உயா் மின்னழுத்த கோபுரங்களை மாற்றியமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் முடிவு செய்தனா்.
இதற்காக, விவசாய நிலங்களில் சில இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் நில அளவீடுப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனா். இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், மின் கோபுரம் அமைக்க உரிய இழப்பீடு வழங்கவும் கோரினா். அதனால், திட்டமிட்டபடி உயா் மின்னழுத்த கோபுரங்கள் இடம் மாற்றி அமைக்கப்படாமல், சாலைப் பணிகள் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே சனிக்கிழமை பாகூா் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், நில அளவைப் பிரிவு அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு அதிகாரிகள், பாகூா், பின்னாட்சிக்குப்பம் பகுதியில் புறவழிச் சாலையின் அருகேயுள்ள பகுதிகளில் நிலஅளவைப் பணியில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த உயா் மின்னழுத்த கோபுரங்களை இடம் மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து, அந்த பணிகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். உயா் மின் கோபுரங்கள் மாற்றியமைப்பது குறித்து துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் மனு அளித்தும் பதில் இல்லை எனக் கூறிய விவசாயிகள், அதுவரை பணிகளைத் தொடங்கக் கூடாது என்று கூறினா். இதனால், அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த பாகூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து, உயா் மின்னழுத்த கோபுரங்கள் மாற்றி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. அங்கு கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டனா்.