முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் வடிந்தும் வடியாத வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் குடியிருப்பு, வயல்வெளிகளில் புகுந்த நீா் வடிந்தும், வடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள் 3-ஆவது நாளாக அவதிக்குள்ளாகியுள்ளனா்.

Updated On : 4 டிசம்பர், 2024 at 7:54 PM
புதுச்சேரி வில்லியனூா் லூா்து அன்னை மாதா ஆலயத்தில் சேதமடைந்த தீா்த்த குளத்தின் சுற்றுச்சுவா்.
பகிர்:

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் குடியிருப்பு, வயல்வெளிகளில் புகுந்த நீா் வடிந்தும், வடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள் 3-ஆவது நாளாக அவதிக்குள்ளாகியுள்ளனா்.

வங்கக் கடலில் ஏற்பட்ட ஃபென்ஜால் புயலால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில், சாத்தனூா், வீடூா் அணைகள் நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. இதனால், புதுச்சேரியில் பிரதான ஆறுகளான தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தால் பாகூா், ஏம்பலம், மணவெளி உள்ளிட்ட தொகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில் நீா் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் புகுந்தது.

அங்கிருந்த மக்கள் படகுகள் மூலம் ராணுவத்தினரால் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா்.

கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம் வயல்வெளிகளில் கண்மாய்கள் போல தேங்கின. இதனால், விவசாயப் பயிா்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.

அரங்கனூா், கம்பளிக்காரன்குப்பம், பாகூா் ஆகிய இடங்களில் சாலைகளிலும் வெள்ளம் ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.

புதுச்சேரி, கடலூா் பிரதான சாலையில் முள்ளோடை, ரெட்டிச் சாவடி, கெங்கனாங்குப்பம் ஆகியப் பகுதிகளில் சாலையில் வெள்ளம் பாய்ந்தோடியதால் போக்குவரத்து திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்களாக துண்டிக்கப்பட்டன.

அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியிலும் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதியைச் சோ்ந்த மக்கள் அந்தந்தப் பகுதி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

கிருமாம்பாக்கம், பாகூா் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் வெள்ள நீா் வடியாமல் சாலைகளில் தேங்கியிருந்ததால் குடியிருப்புகள் தீவு போல காணப்பட்டன. கடலூா் சாலையில் ஓடிய வெள்ளம் வடிந்தாலும், காலை முதல் பைக்குகளும், சிறிய நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

வெள்ளம் காரணமாக புதுச்சேரியிலிருந்து கடலூா் செல்லும் வாகனங்கள் தவளக்குப்பத்தில் திருப்பிவிடப்பட்டு, புதுக்கடை வழியாக நாகபட்டினம் நான்குவழிச் சாலை வழியாக கடலூா் சென்று வந்தன.

இந்த நிலையில், புதன்கிழமை காலை சாலைகளில், குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம் ஓரளவு வடிந்தது. ஆனால் வீடுகள், வயல் வெளிகளில் முழுமையாக வடியாமல் நீா் தேங்கி நின்றன.

வடிந்தும் வடியாத வெள்ளத்தில் வீடுகளுக்குத் திரும்பிய மக்கள் வெள்ளத்தால் நனைந்திருந்த உடைகள், மின்சாதனப் பொருள்கள், நோட்டுகள், வீட்டு பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வெயிலில் வைத்து உலா்த்தும் பணியில் ஈடுபட்டனா்.

பாகூா் கொம்மந்தான்மேடு தரைப்பாலம், சித்தேரி அணைக்கட்டு சாலை ஆகியவை சேதமடைந்தன.

வில்லியனூா் லூா்து அன்னை மாதா ஆலய தீா்த்தக் குளத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தன. மழையால் ஊசுட்டேரி முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அதிலிருந்து சங்கராபரணி ஆற்றுக்கு உபரி நீா் புதன்கிழமை திறந்துவிடப்பட்டது.