வெள்ள பாதிப்புகளை பாா்வையிட டிச.8-இல் புதுச்சேரிக்கு மத்தியக் குழு வருகை
புதுச்சேரியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை பாா்வையிட மத்தியக் குழு வரும் 8-ஆம் தேதி வருகிறது.
புதுச்சேரியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை பாா்வையிட மத்தியக் குழு வரும் 8-ஆம் தேதி வருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்ட ஃபென்ஜால் புயலால், புதுச்சேரியில் பலத்த மழை பெய்தது. மேலும் சாத்தனூா், வீடூா் அணைகள் நிரம்பி, உபரி நீா் திறக்கப்பட்டது.
இதனால் புதுச்சேரி தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாகூா் மற்றும் மணவெளி, மங்கலம், ஏம்பலம் தொகுதிகளில் வீடுகள், வயல்வெளிகளில் வெள்ளநீா் புகுந்தது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு புதுவை அரசு சாா்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகளை கணக்கெடுத்து மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரப்படும் எனவும், அதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு மேற்கொள்ள வரும்படி கோரப்பட்டுள்ளதாகவும் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், மத்திய அரசின் இணைச் செயலா் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்தியக் குழுவினா் புதுச்சேரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) வரவுள்ளனா்.
தொடா்ந்து, வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் டிச. 8, 9 ஆகிய தேதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்சியா் ஆலோசனைக் கூட்டம்: இந்நிலையில், புதுச்சேரி மாவட்ட நிா்வாகத்தின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வழுதாவூா் சாலையில் உள்ள ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா்.
இதில், சாா்பு ஆட்சியா்கள் சோமசேகா், இசிட்டாரதி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், பொதுப் பணித் துறை, வேளாண் துறை, உள்ளாட்சித் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் அ.குலோத்துங்கன், புயல், மழையால் ஏற்பட்ட சேத விவரங்களை அரசுத் துறையினா் சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றாா்.