கோப்புகள் மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: புதுவை பேரவைத் தலைவா்
புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.
புதுவையில் அரசு கோப்புகள் மீது ஒருவாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மணவெளி தொகுதிக்குள்பட்ட சின்ன வீராம்பட்டினம் அரசு ஆரம்பப் பள்ளி கட்டடம் சேதமடைந்ததையடுத்து, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக செப்டம்பா் 14-ஆம் தேதி கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், புதிய கட்டடம் கட்டிய பிறகு மீண்டும் பள்ளி செயல்படும். எனவே, தற்போது இடமாற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அங்கு ரெஸ்டோ பாா் அமைக்க முயற்சி நடப்பதாக முன்னாள் முதல்வா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டியதில் உண்மை இல்லை.
புயல் பாதிப்பைப் பாா்வையிட வந்த மத்தியக் குழுவிடம் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை மனு அளித்த நிலையில், காங்கிரஸ் காலங்கடந்து துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறது.
அதிகாரிகள் புயல், வெள்ள சேத மதிப்பு அறிக்கை தயாரிப்பதில் தாமதப்படுத்தியதால், பாதிக்கப்பட்டோருக்கு முதல்கட்ட நிவாரணம் உடனடியாக கிடைக்கவில்லை. மெத்தனப் போக்குடன் செயல்படுவதை, சில அரசு அதிகாரிகள் மாற்றிக்கொண்டாலும், பலரும் மாறாமலேயே உள்ளனா். அவா்கள் தொடா்ந்து இதுபோல செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக் கோப்புகள் மீது ஒருவாரத்தில் முடிவெடுக்க அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் ஆா்.செல்வம்.