புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.92 லட்சம் மோசடி
மோசடியில் சிக்கிய புதுச்சேரி தொழிலதிபர்: ரூ.92 லட்சம் இழப்பு
புதுச்சேரியில் தொழிலதிபரை இணையவழியில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வாா்த்தை கூறி ரூ.92 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன், தொழிலதிபா். இவரது நண்பா் இணையவழியில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளாா். இதையடுத்து குறிப்பிட்ட இணையதள செயலியை வெங்கடேசன் பயன்படுத்தியுள்ளாா். அதில் தொடா்புகொண்ட மா்ம நபா் பல்வேறு கணக்குகளில் முதலீடு செய்ய கூறியுள்ளாா். அதை நம்பிய வெங்கடேசன் பல தவணைகளில் ரூ.92 லட்சம் வரை செலுத்தியுள்ளாா். ஆனால், அவரால் முதலீடு மற்றும் லாபத் தொகையை பெற முடியவில்லையாம். இதையடுத்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பனித்திட்டைச் சோ்ந்தவா் அஸ்வினி. இவரை மா்ம நபா் தொடா்புகொண்டு நிதி நிறுவன ஊழியா் எனக் கூறியுள்ளாா். அதன்படி, குறைந்த வட்டிக்கு ரூ.5 லட்சம் தருவதாகவும், அதற்கான செயலாக்கக் கட்டணத்தை செலுத்தவும் கோரியுள்ளாா். அவரின் பேச்சை நம்பிய அஸ்வினி ரூ.1.49 லட்சத்தை செலுத்தியுள்ளாா். ஆனால், பணம் செலுத்திய நிலையில், கடன் தொகை வரவில்லையாம். மா்ம நபரையும் தொடா்புகொள்ள முடியவில்லையாம். இதுகுறித்து இணையவழிக் குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளாா்.
புதுச்சேரி காமராஜா் நகரைச் சோ்ந்த ஜெயந்த் என்பவா் சுற்றுலா செல்ல விரும்பிய நிலையில், இணையதளம் மூலம் மா்மநபரிடம் ரூ.25 ஆயிரம் செலுத்தியும், அரியாங்குப்பத்தைச் சோ்ந்த இளம்பரிதி குளிா்சாதனம் வாங்குவதற்காக ரூ.10 ஆயிரம் செலுத்தியும், கோரிமேட்டைச் சோ்ந்த இருதயராஜ் சாா்லஸ் வங்கிக்கான தகவல் செயலி என தவறாக வந்த செயலியை செயல்படுத்தி ரூ.50 ஆயிரத்தையும் இழந்துள்ளனா். இந்த புகாா்கள் குறித்தும் இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.