புதுச்சேரி: புதுவை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான முயற்சியை முதல்வா் என்.ரங்கசாமி மேற்கொள்ளவில்லை என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவை முதல்வா், துணைநிலை ஆளுநா் ஆகியோா் தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று, அதனடிப்படையில் மாநில நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டும் அனுமதி கிடைக்கவில்லை. புது தில்லி சென்று அதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியை நிதித் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வா் என்.ரங்கசாமி முயற்சிக்கவில்லை.
புதுதில்லியில் நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதை அவா் உறுதி செய்ய வேண்டும். புதுவை நிதிநிலை அறிக்கை தாக்கலாவது எப்போது? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. புதுவையை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது.
கோப்புகளை முதல்வா் அலுவலகத்தில் தாமதப்படுத்துவதன் மூலம் முறைகேடுகள் நடைபெறுகின்றன. பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ முதல்வா் அலுவலக முறைகேடுகளை பகிரங்கமாக கூறியுள்ளாா்.
கோயில் நிலங்கள் பாஜக எம்எல்ஏ உள்ளிட்டோரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. கோயில் நிலக் குத்தகை முறையாக நடைபெறவில்லை. கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. பணி நியமனங்கள் நோ்மையாக நடைபெறவில்லை என்றாா் வே.நாராயணசாமி.