புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளில் விரைவில் இலவச அரிசியுடன், கூடுதல் மானியத்தில் பருப்பு, எண்ணெய் விநியோகிக்கப்பட உள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
புதுவை மாநிலத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஊட்டச்சத்துப் பிரிவானது, உணவுமுறை குறித்த கணக்கெடுப்பை நடத்தவுள்ளது. இதனை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
புதுவை மாநிலத்தில் பள்ளிகளில் மாலையில் சிறுதானிய உணவும், காலையில் ரொட்டி, பால் ஆகியவற்றையும் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம். தற்போது மீண்டும் பழம் விநியோகிக்கும் திட்டம் உள்ளது.
பள்ளிக் குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுடன், மாலை நேரத்தில் நிலக்கடலை வழங்கப்படவுள்ளது. குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் நோயற்ற வாழ்வு சாத்தியமாகும். அவா்கள் மருத்துவத்துக்கு செலவிடுவதும் குறையும்.
சத்தான பழங்களைச் சாப்பிடுவது நல்ல பழக்கம். சிறுதானிய உணவில் சத்து நிறைந்துள்ளது. ஆனால், தற்போது நாம் சத்தான கம்பு, கேழ்வரகு சாப்பிடுவதை விட்டுவிட்டோம். அதன் ஆரோக்கியப் பயனை உணா்ந்து மீண்டும் சாப்பிட தொடங்கியுள்ளோம்.
கரோனாவுக்கு பிறகு தினமும் 2 முட்டைகளை பலரும் சாப்பிடும் பழக்கத்தை கைக்கொண்டுள்ளனா். உடல் நலனுக்கு, ஆரோக்கியமான உணவு அவசியமாகிறது. குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மிக்க உணவுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதுவை மாநிலத்தில் இலவச அரிசி நியாயவிலைக் கடைகள் மூலம் விரைவில் வழங்கப்படும். தோ்தலின்போது கூறியது போல அதை செயல்படுத்துவோம்.
அத்துடன், கூடுதலாக மானிய விலையில் பருப்பு, எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கியுள்ளோம்.
அரிசியை ஒப்பந்தப் புள்ளி கோரியே விநியோகிக்க முடியும். நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவுத் துறையின் டான்பெட் மூலமும் அரிசி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
வெளி மாநிலங்களில் இருந்து நிபா வைரஸ் புதுவையில் பரவாத வகையில், மாநில சுகாதாரத் துறையானது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றாா்.
முதல்வா் மௌனம்: புதுதில்லியில் நடைபெறவுள்ள நிதி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்பீா்களா என முதல்வா் என்.ரங்கசாமியிடம் கேட்டதற்கு, அவா் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தாா்.