நாளை புதுவை பட்ஜெட் தாக்கல்: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்
புதுவைக்கான நிகழாண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக.2) தாக்கல் செய்யவுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.
புதுவைக்கான நிகழாண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக.2) தாக்கல் செய்யவுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.
இதுகுறித்து, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை (2024-25) கூட்டத்தொடா் துணைநிலை ஆளுநா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் வியாழக்கிழமை (ஆக.1) நடைபெறும். புதுவை நிதிநிலை அறிக்கையை, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை (ஆக.2) காலை 9 மணிக்கு தாக்கல் செய்கிறாா்.
ஏற்கெனவே மாநிலத்தின் 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கடந்த மாா்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. மீதமுள்ள 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்படுகிறது.
11 நாள்கள்: ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்கள் நடைபெறும். இதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முதல்வா், அமைச்சா்களின் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள், முன்மொழிதல் மீதான விவாதங்கள், வாக்கெடுப்பு நடைபெறும்.
ஆகஸ்ட் 12, 13-ஆம் தேதிகளில் அமைச்சா்கள், முதல்வரின் பதிலுரைகள் இடம்பெறும். இதேபோல, ஆகஸ்ட் 14- ஆம் தேதி தனி நபா் தீா்மானங்கள் இடம்பெறும். அதன் பிறகு, அவை நிகழ்வுகள் தள்ளிவைக்கப்படும். கூட்டத் தொடா் மொத்தம் 11 நாள்கள் நடைபெறவுள்ளன.
சட்டப்பேரவைக் கூட்டத்தை எம்எல்ஏக்கள் விரும்பினால் காலை, மாலை நடத்தவும் தயாராக உள்ளோம். கூட்டத் தொடரின் போது, ஆகஸ்ட் 9, 13, 14, 15 ஆகிய தேதிகளில் கேள்வி நேரம் இடம்பெறும்.
அவை நடவடிக்கைகளுக்கு அரசுச் செயலா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தவறாது பங்கேற்க தலைமைச் செயலா் உத்தரவிட்டுள்ளாா். தலைமைச் செயலா் அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறாா். புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் புதுவையின் வளா்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவாா் என நம்புகிறோம் என்றாா் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.