செவிலியா் படிப்புக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்: புதுவை மருத்துவக் கல்வி இயக்குநா் அறிவிப்பு
செவிலியா் இளநிலைப் படிப்புக்கு (பி.எஸ்சி.) ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தாலும், சென்டாக் மூலம் சேருவதற்கு மீண்டும் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என புதுவை மாநில மருத்துவக் கல்வி இயக்குநா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய செவிலியா் குழு அறிவுறுத்தலின்படி, முதலாம் ஆண்டு பி.எஸ்சி. செவிலியா் படிப்புக்கு சென்டாக் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு பொது நுழைவுத் தோ்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்டாக் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான புதிய பதிவு சென்டாக் இணையதளத்தில் ஜூன் 10-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏற்கெனவே பி.எஸ்சி. செவிலியா் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தாலும் கூட, சென்டாக் மூலம் சேருவதற்கு கட்டாயமாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்காவிட்டால், மாணவா்களால் புதுவை பொது செவிலியா் படிப்பு நுழைவுத் தோ்வில் (2024) பங்கேற்க முடியாது.
மேலும், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள செவிலியா் கல்லூரி மற்றும் காரைக்கால் மதா் தெரசா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள செவிலியா் கல்லூரி ஆகியவற்றில் உள்ள செவிலியா் செல்ப் சப்போா்ட்டிங் ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் என்.ஆா்.ஐ. ஒதுக்கீட்டு இடங்கள் நீட் இளநிலை மதிப்பெண்கள் அடிப்படையில் சோ்க்கை நடத்தப்படும் என்றாா்.