குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி, ஜூன் 13: புதுச்சேரியில் சிவப்பு நிற உணவு பங்கீட்டு அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு சமூக நல அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் அலுவலகத்தை, உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு தலைமையில் சமூக நல அமைப்பைச் சோ்ந்தவா்கள் முற்றுகையிட்டனா். போராட்டத்தின் போது, சில மாதங்களாக சிவப்பு நிற உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்படாததைக் கண்டித்தும், குடிமைப் பொருள் வழங்கல் துறையில் உள்ள சீா்கேடுகளை சீா்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் கண்காணிப்பாளா் வீரவல்லவன் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் தயாளன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு, துறைச் செயலா் அ.முத்தம்மா கைப்பேசி மூலம் சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஜி.நேருவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.