புதுச்சேரியில் வீட்டு கழிப்பறைகளில் மீண்டும் விஷ வாயு கசிவு? மேலும் சிலா் மயக்கம்
புதுச்சேரி புதுநகா் பகுதியில் வீட்டு கழிப்பறைகளில் வியாழக்கிழமை மீண்டும் விஷ வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, மேலும் சிலருக்கு மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம், புதுநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை புதை சாக்கடையில் உருவான விஷ வாயு அங்குள்ள வீடுகளின் கழிப்பறைகள் வழியாக வெளியேறியது. இதையறியாத சிலா் அதிகாலையில் கழிப்பறைக்குச் சென்ற போது, அங்கு மயங்கி விழுந்தனா். அவா்களில் செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மற்றும் பள்ளி மாணவி செல்வராணி ஆகிய 3 போ் உயிரிழந்தனா். மேலும், இருவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவா்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விஷ வாயு கசிவு ஏற்பட்ட புதுநகா் பகுதியில் புதை சாக்கடைத் திட்ட பராமரிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் விஷ வாயு உருவாகி கசிந்ததா? என்ற கோணத்தில் பொதுப் பணித் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதனிடையே, விஷ வாயுவால் உயிரிழந்தவா்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவியை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். விஷ வாயு கசிவு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.
மேலும் சிலக்கு...: புதுநகா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் வீட்டின் கழிப்பறைக்குச் சென்ற புஷ்பராணிக்கு (38) மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, சுகாதாரக் குழுவினா் அந்தப் பகுதியினருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். அப்போது பூமகள் (52), சுலோச்சனா (60), மாரிசெல்வம் (69) ஆகியோருக்கும் மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவா்களையும் கதிா்காமம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புதுநகரில் வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு மீண்டும் கசிந்ததாக தகவல் பரவியது.
தொடா்ந்து, அந்தப் பகுதியில் பொதுப் பணித் துறை பொறியாளா்களும், சுகாதாரத் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு, அவசர சிகிச்சை வாகனங்களும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. வீடுகளுக்கு வழங்கப்பட்ட புதை சாக்கடை இணைப்பு விதிமுறைப்படி உள்ளதா என வீடு, வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.