போக்ஸோ வழக்கில் பேருந்து நடத்துநருக்கு 20 ஆண்டுகள் சிறை
புதுச்சேரி: போக்ஸோ வழக்கில் தனியாா் பேருந்து நடத்துநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் கீழ்பாதியைச் சோ்ந்தவா் ஏழைமுத்து மகன் பாபு (29), தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, கடந்த 2023-ஆம் ஆண்டு அவரைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து அந்தச் சிறுமியின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பாபுவைக் கைது செய்தனா்.
புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், பாபுவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து நீதிபதி வி.ஷோபனா தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
இந்த வழக்கில், அரசு சாா்பில் வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.