காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பு: வெ.வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு பாதிப்பை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஷாஜகான் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு பாதிப்பை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஷாஜகான் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
புதுச்சேரியில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், கடல் சீற்றமும் அதிகரித்துள்ளதாக மீனவா்கள் கூறுகின்றனா்.
இதையடுத்து காலாப்பட்டு பிள்ளைச்சாவடி, சின்னக் காலாப்பட்டு பகுதிகளில் கடல் அரிப்பு காரணமாக கடல் நீா் மீனவா் குடியிருப்புகளில் புகுந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
கடல் அரிப்பால் கடற்கரையோரச் சாலைகள், மீனவா்களது குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஷாஜகான் ஆகியோா் பிள்ளைச்சாவடி கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்று கடல் அரிப்பு பாதிப்பை நேரில் பாா்வையிட்டனா்.
அப்போது , கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் கடற்கரையிலிருந்து கிழக்கு நோக்கி கொட்டப்படும் கற்களை 50 மீட்டா் நீடிக்க மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.