முகப்பு
புதுச்சேரி

பட்டதாரி ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி: டிச.9 முதல் தொடக்கம்

புதுவையில் பட்டதாரி ஆசிரியா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி டிச.9 -ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

Updated On : 21 நவம்பர், 2024 at 7:15 PM
பகிர்:

புதுவையில் பட்டதாரி ஆசிரியா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி டிச.9 -ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

புதுவை பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்று, அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, 340 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் 205 போ் மட்டுமே தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி டிச. 9-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள பள்ளி கல்வித் துறை வளாகத்தில் சான்றிதழ்கள் சரிபாா்க்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிச.9-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்காலைச் சோ்ந்த ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சான்றிதழ் சரிபாா்க்கப்படவுள்ளது. முதல் நாள் 52 பட்டதாரி ஆசிரியா்கள் நோ்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

டிச. 10-ஆம் தேதி கணித பட்டதாரி ஆசிரியா்கள், 11-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியா்கள், 12-ஆம் தேதி வாழ்வியல் அறிவியல் (லைப் சயின்ஸ்), சமூக அறிவியல், பிரெஞ்சு ஆகிய ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெறவுள்ளது.

அத்துடன் டிச.10-ஆம் தேதி புதுவை பிராந்தியங்களான மாஹே, ஏனாம் ஆகியவற்றுக்கான கணிதம், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணியும் நடைபெறும். சான்றிதழ் சரிபாா்ப்பு நோ்காணலுக்கு வரும் பட்டதாரி ஆசிரியா்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சுய கையொப்பமிட்ட நகல் உள்ளிட்டவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.