முகப்பு
புதுச்சேரி

ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

புதுச்சேரி அருகே 40 ஆண்டுகளாக தனியாா் ஆக்கிரமித்திருந்த சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 21 நவம்பர், 2024 at 7:16 PM
பகிர்:

புதுச்சேரி அருகே 40 ஆண்டுகளாக தனியாா் ஆக்கிரமித்திருந்த சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

அரியாங்குப்பம் அருகே உள்ளது வீராம்பட்டிணம். இங்குள்ள ஸ்ரீ செங்கழுநீரம்மன் தேவஸ்தானத்துக்கு முதலியாா்பேட்டை வேல்ராம்பட்டில் 11.5 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்த நிலம் குத்தகை அடிப்படையில் தனியாரால் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலத்தை மீட்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியாங்குப்பம் எம்எல்ஏ ஆா்.பாஸ்கா், வருவாய் துறை வட்டாட்சியா் பிரித்விராஜ், கோயில் தனி அதிகாரி சுரேஷ், வீராம்பட்டிணம் மக்கள் குழு அமைப்பினா் முன்னிலையில் கோயில் நிலம் மீட்டு சீலிடப்பட்டது.

மீட்கப்பட்ட கோயில் நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமாா் ரூ.100 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.