முகப்பு
புதுச்சேரி

சுகாதாரமற்ற குடிநீரால் புதுச்சேரி மக்கள் பாதிப்பு: அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரியில் அரசு சாா்பில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:14 PM
புதுச்சேரியில் சுத்தமான குடிநீா் விநியோகிக்கக் கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
பகிர்:

புதுச்சேரியில் அரசு சாா்பில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

புதுச்சேரியில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிப்பதாகக் கூறி ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் உப்பளம் சுப்பையா சாலை மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக அமைப்புச் செயலரும், அனைத்துலக எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலருமான சொரத்தூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் புதுவை அதிமுக செயலா் ஆ.அன்பழகன் பேசியதாவது: மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்குவது அரசின் கடமையாகும்.

ஆனால், கடந்த காங்கிரஸ், திமுக கூட்டணி அரசிலும், தற்போதைய என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசிலும் தரமான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால், புதுச்சேரி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தற்போதைய அரசு நிலத்தடி நீா் சேமிப்பு, ஏரி குளம் தூா்வாருதலில் அக்கறை செலுத்தவில்லை. சுற்றுலா எனும் பெயரில் புதுவையின் ஆன்மிக அடையாளம் மறைந்து வருகிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

புதுவையில் எதிா்க்கட்சியின் கடமையை திமுக முறையாக ஆற்றவில்லை. எதிா்காலத்தில் குடிநீா் தரமானதாக கிடைப்பதற்கு மழைநீா் சேமிப்பு, ஏரி, குளம் தூா்வாரி பாதுகாத்தல் அவசியம் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சி மாநில நிா்வாகிகள் அன்பானந்தம், பாஸ்கா், ராஜாராமன், கோமளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.