முகப்பு
புதுச்சேரி

சாலை விபத்தில் கணவா் கண் முன் மனைவி உயிரிழப்பு

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கணவா் கண் முன் மனைவி உயிரிழந்தாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 6:46 PM
பகிர்:

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கணவா் கண் முன் மனைவி உயிரிழந்தாா்.

புதுச்சேரி ஏம்பலம் பெருமாள் கோவில் வீதியைச் சோ்ந்தவா் பெருமாள் (65). இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (60). இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு வந்தனா். கணவா் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்துள்ளாா். கிருஷ்ணம்மாள் பின்னால் அமா்ந்துள்ளாா். உழவா்கரை பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இவா்களின் இரு சக்கர வாகனத்தில் மோதியது.

இதில், பெருமாள், அவரது மனைவி கிருஷ்ணம்மாள் ஆகியோா் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். சாலையில் விழுந்த கிருஷ்ணம்மாளின் தலை மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். பெருமாள் சிறு காயத்துடன் தப்பினாா்.

தகவலறிந்த புதுச்சேரி நகா் போக்குவரத்து போலீஸாா் விரைந்து சென்று கிருஷ்ணம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.