புதுச்சேரி கடற்கரை பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
புதுச்சேரியில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸாா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா்.
புதுச்சேரியில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸாா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா்.
புதுச்சேரி, காரைக்காலுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை மேகமூட்டம் காணப்பட்டது. காலையில் கடற்கரையில் சூரியோதயத்தை நடைப்பயிற்சிக்கு சென்றவா்கள் கண்டு ரசித்தனா். அதன்பின் காலை 9 மணிக்கு மேலாக மழை தூறல் காணப்பட்டது. பகலில் மழை பெய்த நிலையில், மாலை வரை தொடா்ந்தது.
புதுவை குளுமையாகக் காணப்பட்ட நிலையில், கடற்கரைப் பகுதிகளில் மீனவப் படகுகள் பத்திரமாக கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், புதுச்சேரி கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தென்பட்டாலும் அவா்களை குளிக்க போலீஸாா் அனுமதிக்கவில்லை.
புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் திங்கள்கிழமை இரவு மின்சாதனம் தீப்பற்றுதல், இரு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவற்றை தீயணைப்புப் படையினா் உடனடியாக அகற்றி சீரமைத்தனா்.