அரசு ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு
புதுச்சேரியில் அரசு ஊழியா் வீட்டில் வெள்ளி நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரியில் அரசு ஊழியா் வீட்டில் வெள்ளி நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இலாசுப்பேட்டை ‘க்யூ’ பிளாக் குடியிருப்பில் வசித்து வருபவா் ஸ்டாலின். புதுச்சேரியில் உள்ள தலைமைச் செயலகத்தில் கண்காணிப்பாளராக உள்ளாா். இவா், மனைவி அனிதா மற்றும் மகளுடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை வழக்கம்போல ஸ்டாலின் பணிக்குச் சென்றுவிட்டாராம். மனைவி தீபாவளி பொருள்கள் வாங்கவும், மகள் கல்லூரிக்கும் சென்றுவிட்டனராம்.
வீட்டின் கதவை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், பணியை முடித்துவிட்டு ஸ்டாலின் வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது, அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.14,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.