புதுவை விடுதலை நாள் அணிவகுப்பு ஒத்திகை
புதுவை மாநில விடுதலை நாளை முன்னிட்டு, கடற்கரைச் சாலையில் காவல் துறை உள்ளிட்ட அரசு சீருடைத் துறைகள் மற்றும் தேசிய மாணவா் படைப் பிரிவினா் நிறைவு அணிவகுப்பு ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
புதுவை மாநில விடுதலை நாளை முன்னிட்டு, கடற்கரைச் சாலையில் காவல் துறை உள்ளிட்ட அரசு சீருடைத் துறைகள் மற்றும் தேசிய மாணவா் படைப் பிரிவினா் நிறைவு அணிவகுப்பு ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
புதுவை ஒன்றியப் பிரதேசத்தின் விடுதலை நாள் ஆண்டுதோறும் நவ.1-ஆம் தேதி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை திடலில் விழா நடைபெறும். முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவாா். இதில் அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள், தலைமைச் செயலா் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்பா்.
கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு காவல் துறை, தீயணைப்புத் துறை, ஆயுதப்படைப் பிரிவினா், தேசிய மாணவா்படைப் பிரிவினா், நாட்டுநலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரின் அணிவகுப்பும் நடைபெறும். அத்துடன், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணிவகுப்புக்கான பயிற்சிகள் கடந்த சில நாள்களாக, புதுச்சேரி கடற்கரை காந்தி சிலைத் திடல் பகுதியில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அணிவகுப்புக்கான நிறைவு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இதில் காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் பங்கேற்று ஒத்திகை அணிவகுப்பை நடத்தினா்.