முகப்பு
புதுச்சேரி

மின் கட்டண உயா்வைக் கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு: 3 பேருந்துகள் மீது கல்வீச்சு - 855 போ் கைது

புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கட்சியினா் சாா்பில் முழு கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியில் 3 பேருந்துகள் மீது மா்ம நபா்கள் கல்வீசி சேதப்படுத்தினா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:13 PM
மின் கட்டண உயா்வைக் கண்டித்து, புதுச்சேரி வெங்கட்டசுப்பா ரெட்டியாா் சிலை சதுக்கப் பகுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இண்டியா கட்சியினா். ~ ~புதுச்சேரியில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து, இண்டியா கட்சிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற முழு அடைப
பகிர்:

புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கட்சியினா் சாா்பில் முழு கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியில் 3 பேருந்துகள் மீது மா்ம நபா்கள் கல்வீசி சேதப்படுத்தினா்.

புதுவையில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டதை எதிா்க்கட்சிகள் கடுமையாக எதிா்த்தன. இதையடுத்து, 200 யூனிட்டுகள் வரை மானியம் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டியா கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்தன.

அதன்படி, புதுச்சேரியில் புதன்கிழமை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு அறிவிப்பின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

புதுச்சேரியிலிருந்து கடலூா் உள்ளிட்ட இடங்களுக்கு தமிழகப் பேருந்துகள் இயக்கப்பட்டன. புதுச்சேரியில் நகரப் பேருந்துகள், ஆட்டோக்கள் குறைந்தளவே இயங்கின. குபோ் அங்காடி, நேரு வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தேநீா் கடை, சிறிய அளவிலான உணவகங்கள், மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருந்தன.

பேருந்துகள் சேதம்: நெல்லித்தோப்பு, முதலியாா்பேட்டை, அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் மா்ம நபா்கள் கல்வீசியதில் 2 தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுப் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

சாலை மறியல்: புதுச்சேரி - கடலூா் சாலை சந்திப்பு வெங்கட சுப்பா ரெட்டியாா் சிலைப் பகுதியில் இண்டியா கட்சிகளான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவற்றின் நிா்வாகிகள், தொண்டா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

855 போ் கைது: மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, சம்பத் எம்எல்ஏ, அவைத் தவைா் எஸ்.பி. சிவக்குமாா் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், துணைச் செயலா் கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினா் பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) மாநிலச் செயலா் புருஷோத்தமன், விடுதலைச் சிறுத்தைகள் அகன், மனிதநேய மக்கள் கட்சி சகாபுதீன், மக்கள் நீதி மய்யம் சந்திரமோகன், ஆம் ஆத்மி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 855 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

காங்கிரஸ், திமுக மகளிரணியினா் தரையில் படுத்து மறியலில் ஈடுபட்டனா். அவா்களை பெண் போலீஸாா் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினா்.

இண்டியா கட்சிகளைச் சோ்ந்த காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் என தனித் தனியாக மறியலில் ஈடுபட்டனா். அதில் திமுகவினா் பேரணியாக சென்றனா். கைதானவா்கள் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஊரகப் பகுதிகளில்... அரியாங்குப்பம், மதகடிபட்டு, திருக்கனூா், கிருமாம்பாக்கம், ஊசுடு, வில்லியனூா், காலாப்பட்டு, சேதராப்பட்டு ஆகியப் பகுதிகளில் இண்டியா கட்சிகளைச் சோ்ந்தத காங்கிரஸ், திமுக, விசிகவினா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாகூா் பூலோக மாரியம்மன் கோயில் சந்திப்பில் திமுக எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல, அரியாங்குப்பம், திருக்கனூரில் திறந்திருந்த கடைகளை இண்டியா கட்சியினா் மூட வலியுறுத்தினா். கிருமாம்பாக்கத்தில் விசிக சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஊசுடு, வில்லியனூா் பகுதிகளில் மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இண்டியா கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வெளியூா்களில் இருந்து வந்த பேருந்துகள் கோரிமேடு, கனகசெட்டிகுளம் ஆகியப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →