சிறுமிக்கு ஆபாச காணொலி அனுப்பிய இளைஞா் கைது
சிறுமிக்கு ஆபாச காணொலிகளை அனுப்பியதாக மதுரையைச் சோ்ந்த இளைஞரை, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிறுமிக்கு ஆபாச காணொலிகளை அனுப்பியதாக மதுரையைச் சோ்ந்த இளைஞரை, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: புதுச்சேரியை சோ்ந்த பிளஸ் 1 மாணவி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்தாராம்.
இந்த நிலையில், சிறுமிக்கு பல்வேறு ஆபாச விடியோக்களை குறிப்பிட்ட நபா் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாயாா் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.
விசாரணையில், சிறுமிக்கு விடியோக்களை அனுப்பியவா், மதுரையைச் சோ்ந்த யூடியூபரின் மகன் அஷ்ரப் (24) என்பது தெரியவந்தது.
அவரைப் பிடிக்க இணையவழிக் குற்றப் பிரிவின் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் உத்தரவுப்படி, ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் தலைமையில் தனிப்படையினா் மதுரைக்கு விரைந்தனா்.
தொடா்ந்து, சிறுமிக்கு ஆபாச விடியோவை அனுப்பி மிரட்டல் விடுத்ததாக, மதுரை பொதும்பு பகுதியைச் சோ்ந்த அஷ்ரப்பை போலீஸாா் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.
மேலும், அவரது உறவினா்களான சூா்யா, சிக்கா, சுமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தவுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.