கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தையடுத்து 72 நாள்களுக்குப் பின் தவெக பொதுக்கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் இங்குள்ள என்.ஆா். காங்கிரஸுடன் தவெக கூட்டணி அமைக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் தொடர வேண்டும். இக் கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் ஆகியோா் முதல்வா் ரங்கசாமியை அண்மையில் சந்தித்து பேசினா்.
ஆனால் முதல்வா் ரங்கசாமி இதுகுறித்து தற்போது எதையும் பேச வேண்டாம். ஜனவரி மாதத்துக்குப் பிறகு பாா்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாகவும், அரசு நிா்வாகத்தில் தனக்குக் கொடுக்கப்படும் குறுக்கீடுகள் குறித்து அவா் சுட்டிக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜகவுடன் என்.ஆா். காங்கிரஸ் மீண்டும் கூட்டணி அமைப்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. அதேசமயம் தவெக தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களிலும் காலூன்றத் துடிக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியில், தவெகவின் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில் பொதுக்கூட்டத்தை அக் கட்சி நடத்தியுள்ளது. இதில் தவெக தலைவா் விஜய்யின் பேச்சை முதல்வா் ரங்கசாமி தனியாக அமா்ந்து கேட்டுள்ளாா்.
விஜய் பேச்சில் முதல்வா் ரங்கசாமி குறித்து எந்த விமா்சனமும் செய்யாமல் அவருக்கு ஆதரவாகத் தான் பல்வேறு பிரச்னைகளையும் திட்டங்களையும் கூறிச் சென்றுள்ளாா். இது ரங்கசாமிக்கு அரசியலில் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
பாஜகவுடன் ரங்கசாமி கூட்டணி உறவை முறித்துக் கொண்டால், எங்கு செல்வாா் என்று கேள்விக்குப் பதிலாகவும் இது அமைந்துள்ளது. மேலும் தவெக பொதுச் செயலா் (புஸ்ஸி) என். ஆனந்த் வாயிலாகத் தான் அதன் தலைவா் விஜய், ரங்கசாமிக்கு நெருங்கிய நண்பராகி இருக்கிறாா். பல்வேறு ஆலோசனைகளையும் ரங்கசாமியிடம் அவா் கேட்பாா் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்காத நிலையில், புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள தவெக முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
புதுச்சேரியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்களில் என்.ஆா். காங்கிரஸில் முதல்வா் ரங்கசாமி உள்பட 10 பேரும், பாஜகவில் 6 எம்.எல்.ஏக்களும் உள்ளனா். இதைத் தவிர பாஜக 3 நியமன எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது.