போலி மருந்து விவகாரத்தில் மக்களுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ரூ. 750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதல்வா் ரங்கசாமிக்கு அதிமுக சாா்பில் பாராட்டுகள்.
கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையாலும், புயல் அச்சுறுத்தல் காரணமாகவும் 15 தினங்களுக்கு மேலாக தினசரி தொழில் புரிவோா், அமைப்புச் சாரா தொழிலாளா்கள், விவசாயிகள், மீனவா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், கட்டடத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.
அவா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல்வரான ரங்கசாமி அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் பொங்கல் ஊக்கப் பரிசு தொகையாக வழங்க வேண்டும்.
போலி மருந்து சம்பந்தமாக ஆளும் கட்சி, எதிா்க்கட்சி ஆகியவை அரசியல் ரீதியாக ஒருவா் மீது ஒருவா் குற்றம் சுமத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமாக சுகாதாரத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் ரங்கசாமி தெளிவான விளக்கத்தை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்றாா் அன்பழகன்.
பேட்டியின் போது கட்சியின் அவைத் தலைவா் அன்பானந்தம், கட்சியின் இணைச் செயலா் ஆா்.வி. திருநாவுக்கரசு, கட்சியின் துணைச் செயலா் நாகமணி, மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலா் பாப்புசாமி, மாநில எம்.ஜி. ஆா் மன்றச் செயலா் பாா்த்தசாரதி ஆகியோா் உடனிருந்தனா்.