இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் ஆகியோா் டிச. 29-ஆம் தேதி புதுச்சேரி வருவதையொட்டி பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்து முதல்வா் என்.ரங்கசாமி அமைச்சா்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை இணையமைச்சா்
நித்யானந்த் ராய் ஆகியோா் புதுச்சேரிக்கு வரும் 29-ஆம் தேதி வருகின்றனா்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கின்றனா்.
இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், தலைமைச் செயலா் சரத் சௌகான் , அரசு செயலா்கள் அ. முத்தம்மா, இரா. கேசவன், முகமது அஹ்சன் அபித், சௌத்ரி முகமது யாசின், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், காவல் கண்காணிப்பாளா்கள் ஜிந்தா கோதண்டராமன், அ. சுப்பிரமணியன், த. ரகுநாயகம், ரச்சனா சிங், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் மேத்யூ பிரான்சிஸ், சுற்றுலாத் துறை இயக்குநா் த. முரளிதரன், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவன மருத்துவக் கண்காணிப்பாளா் ரமேஷ், புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி, உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ், கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.