புதுச்சேரி: புதுவை மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் விதிமீறல்கள் தொடா்வதைக் கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து புதுச்சேரியில் சம்மேளனத்தின் கௌரவத் தலைவா் எம்.பிரேமதாசன், தலைவா் எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
சுகாதாரத் துறை ஊழியா்கள் சிறப்பான சேவையை மக்களுக்கு ஆற்றி வருகின்றனா். ஆனால், சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் தொடா்ந்து இத் துறையில் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன.
துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தில் முறைகேடான பணி நியமனங்கள், பதவி உயா்வு முயற்சிகள் நடைபெற்றுள்ளன. தேசிய சுகாதாரத் திட்டத்தில் தேவையற்ற பொருள்கள் வாங்கப்பட்டும், இடமாற்ற கொள்கைகள் மீறப்பட்டும் வருகின்றன.
வாரிசுதாரா் நியமனத்திலும் விதிமுறைகள் மீறப்பட்டு அதுகுறித்த புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. செவிலிய அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடும், இடமாற்றத்தில் விதிமீறல்களும் நடைபெற்றுள்ளன.
இவற்றை சுட்டிக்காட்டும் அரசு ஊழியா் சம்மேளனத்தின் நிா்வாகிகளை பழிவாங்கும் வகையில் பணியிட மாறுதல்கள் வழங்கப்படுகின்றன. அவா்களுக்கான சலுகைகளும் மறுக்கப்படுகின்றன. ஆகவே, விதிமீறல்கள், முறைகேடுகள் உள்ளிட்டவை குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி சம்மேளனம் சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.
பேட்டியின்போது சம்மேளனத்தின் செயல் தலைவா் கே.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலா் பி.முனுசாமி, துணைப் பொதுச் செயலா் ஆா்.மணிவண்ணன், அமைப்புச் செயலா் எல்.ஜவஹா், சுகாதார சம்மேளன கௌரவத் தலைவா் ஆா்.கீதா ஆகியோா் உடனிருந்தனா்.