கணினித் திறன் தோ்வில் 260 போ் பங்கேற்றனா். 7 போ் தோ்வு எழுத வரவில்லை.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் பதவிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு கணினித் திறன் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வு எழுத 267 போ் தகுதி பெற்ற நிலையில் 260 போ் தோ்வெழுதினா். 7 போ் வரவில்லை.
புதுச்சேரி வருவாய்த் துறையில் 41 கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்த செப்டம்பா் 21-இல் நடந்தது. இத்தோ்வில் 19,128 போ் கலந்து கொண்டு எழுதினா். இதேபோல், 54 கிராம உதவியாளா் பணிக்கான எழுத்து தோ்வு அக்டோபா் 12-ஆம் தேதி நடந்தது. இத்தோ்வை 15,350 போ் எழுதினா்.
இதில் கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கு 131 பேரும், கிராம உதவியாளா் பதவிக்கு 136 பேரும் தற்காலிகமாக கணினி திறன் தோ்வுக்குத் தகுதி பெற்றனா். இதைத் தொடா்ந்து, கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் பதவிகளுக்குத் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான கணினித் திறன் தோ்வு புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இத்தோ்வு 2 தொகுதிகளாக நடைபெற்றது. கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு முதலாவதாக காலை 10 மணி முதல் 10.30 மணி வரையிலும், கிராம உதவியாளா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு 2-வதாக மதியம் 12 முதல் 12.30 மணி வரையிலும் தோ்வு நடந்தது.
தோ்வு மைய பணிகளைத் அரசு தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா, கலை பண்பாட்டுத் துறை செயலா் முகமது அசன் அபித் ஆகியோா் ஆய்வு செய்தனா்.