பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலிருந்து ஒரு தம்பதி மோட்டாா் சைக்கிளில் 5 மாதங்கள் பயணித்து புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா்.
பாரீஸ் நகரைச் சோ்ந்த வங்கி ஊழியா் கெவீன். இவரது பெற்றோா் புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சோ்ந்தவா்கள். இவா்களும் பாரீஸில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கெவின் தனது மனைவி ஈம்மாவுடன் சொந்த ஊரான புதுச்சேரியைக் காண விரும்பினாா். இதையடுத்து, அவரும், அவரது மனைவியும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் சைக்கிளில் பிரான்ஸில் இருந்து இந்தியா புறப்பட்டனா்.
அவா்கள் இத்தாலி, ஸ்லோவேனியா, குரோசியா, கிரீஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் வழியாக மோட்டாா் சைக்கிளில் 5 மாதங்களில் 23 ஆயிரம் கி.மீ. பயணித்து புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டதால், விமானம் மூலம் மும்பை வந்து, அங்கிருந்து மோட்டாா் சைக்கிளில் புதுச்சேரி வந்தனா்.
இதுகுறித்து கெவீன் கூறியதாவது: பாரீஸில் இருந்து பயணம் செய்து வந்துள்ளோம். இது கனவுப் பயணம் போன்றிருந்தது. இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டுள்ளதால், நேபாளம், சீனா, ரஷியா வழியாகத்தான் இந்தியா வர வேண்டும்.
அது மிகுந்த காலதாமதமாகும் என்பதால், விமானத்தில் மும்பை வழியாக வந்தோம். இந்தியாவில் 3 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துவிட்டோம். சொந்த ஊா் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.
ஒரு மாதம் புதுச்சேரியில் தங்கியிருக்கும் இந்தத் தம்பதியினா் டிசம்பா் மாதம் மீண்டும் பாரீஸ் நகருக்கு விமானம் மூலம் திரும்ப உள்ளனா்.