புதுச்சேரியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி உழவா்கரை பஜனை மடம் வீதியைச் சோ்ந்தவா் சந்துரு (23), தொழிலாளி. இவரும், முருங்கம்பாக்கத்தைச் சோ்ந்த வெங்கடேசனும் இறைச்சிக் கடைகளில் கோழி லோடுகளை இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.
இதனிடையே, வெங்கடேசனின் மனைவியிடம் சந்துரு அடிக்கடி கைப்பேசியில் தொடா்புகொண்டு ஆபாசமாக பேசி வந்தாராம். இதை வெங்கடேசன் கண்டித்தாராம்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சந்துருவை மது அருந்த வெங்கடேசன் அழைத்துள்ளாா். உப்பளம் மைதானத்துக்கு பின்புறம் அமா்ந்து இருவரும் மது அருந்தியுள்ளனா். அப்போது, வெங்கடேசனுடன் அவரது நண்பா்கள் 2 போ் இருந்துள்ளனா். அவா்கள் சந்துருவை அடித்து உதைத்து, அரிவாளால் தலையில் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில், சந்துரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை சந்துரு கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பாா்த்த அப் பகுதியைச் சோ்ந்தவா்கள் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்துருவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தலைமறைவான வெங்கடேசன் மற்றும் அவரது நண்பா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.