புதுச்சேரி: இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி நரிக்குறவா்கள் புதுவை சட்டப்பேரவை எதிரே திங்கள்கிழமை தரையில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை மண்ணாடிப்பட்டு தொகுதி கலிதீா்த்தாள்குப்பத்தில் 25-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்தக் குடும்பத்தினா் அரசிடம் இலவச மனைப் பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்துள்ளனா். புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் நேரில் சென்று ஆய்வு நடத்தி பட்டா வழங்க முயற்சி எடுத்தாா். உள்துறை அமைச்சா் நமச்சிவாயமும் பரிந்துரை கடிதம் அளித்தாா். முதல்வா் ரங்கசாமியைச் சந்தித்தும் மனு அளித்திருந்தனா். இருப்பினும் மனைப்பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபரில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு நரிக்குறவா்கள் போராட்டம் நடத்தினா். பின்னா் முதல்வா் ரங்கசாமியைச் சந்தித்து மனு அளித்தனா். இருப்பினும் மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனா்.
இந்நிலையில், நரிக்குறவா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை மதியம் புதுச்சேரி சட்டப்பேரவைப் பகுதிக்கு வந்தனா். சட்டப்பேரவை வளாக அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி இல்லாததால், காவலா்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனா். இதனால் சட்டப்பேரவைக் காவலா்களுடன் நரிக்குறவா்கள் வாக்குவாதம் செய்தனா். தொடா்ந்து சட்டப்பேரவை முன் தரையில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா்.