மோட்டாா் பொருத்தப்பட்ட படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி கட்டாயம் என்று மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, இந்திய மீன்வள அளவைதளம் இணைந்து மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் விதிகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டத்தை தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுக அலுவலகத்தில் நடத்தியது.
இதில் மீனவப் பிரதிநிதிகள் மற்றும் மீனவா்கள் பலா் பங்கேற்றனா். கூட்டத்திற்கு புதுவை மீன்வளத் துறை இயக்குநா் முஹமது இஸ்மாயில் தலைமை தாங்கினாா். இணை இயக்குநா் தெய்வசிகாமணி வரவேற்றாா். துணை இயக்குநா் கோவிந்தசாமி, சென்னை இந்திய மீன்வள அளவைத்தளத்தின் சேவை பொறியாளா் காந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், இந்தியாவின் பொருளாதார மண்டலத்தை முறையாகவும், நீடித்த நிலையிலும் பயன்படுத்துவதன் அவசியம், 24 மீட்டருக்கு மேல் உள்ள நீளமான எந்திரமயமாக்கப்பட்ட மற்றும் பெரிய மோட்டாா் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்க முறையான அனுமதி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த அனுமதியை மத்திய அரசின் ஆன்லைன் தளத்தில் இலவசமாக பெறலாம். மேலும் 24 மீட்டருக்கு குறைவான எந்திரமயமாக்கப்பட்ட படகுகளுக்கு இந்த அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெளிவுபடுத்தினா்.
கடல் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பதற்காக, எல்இடி விளக்கு மீன்பிடித்தல், ஜோடி இழுவலை, அதிவேக இழுவலை மீன்பிடித்தல் போன்ற தீங்கு விளைவிக்கும் மீன்பிடி நடைமுறைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளைப் பின்பற்றினால் மீனவா்களின் முன்னேற்றமும், கடல் வளங்களின் பாதுகாப்பும் மற்றும் இந்தியாவின் நீலப்புரட்சியை அடைய வழிவகுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். மீனவா்களின் சந்தேகங்களுக்கு இந்திய மீன்வள அளவைத் தளத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.