புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் 58.5 சதவிகிதம் வாக்காளா்களின் பெயா்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அம்மாநில தலைமை தோ்தல் அதிகாரி ப. ஜவஹா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
நவம்பா் 4 முதல் வரும் டிசம்பா் 4 ஆம் தேதி வரை வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கான படிவங்களை வாக்காளா்களுக்கு வீடு வீடாகச் சென்று அளிக்கும் நடவடிக்கை, திரும்பப் பெறும் நடவடிக்கை, பதிவேற்றம் செய்யும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.
96 சதவிகிதம் வாக்காளா்களுக்குப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போதும் ஒரு சிலா் படிவங்களைப் பெற்று வருகின்றனா். இதனால் இது 97 சதவிகிதம் வரை செல்லவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர முகவரியில் இல்லாமல் நிரந்தரமாக வேறு இடங்களுக்குச் சென்றவா்கள், இறந்த வாக்காளா்களுக்குப் படிவங்கள் வழங்க முடியவில்லை.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 10.21 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இதில் 9,76,747 பேருக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் பெறப்பட்ட படிவங்களில் 5,89,075 படிவங்கள் பதவியேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது 58.5 சதவிகிதமாக இருக்கும். பெறப்பட்ட விண்ணப்பங்களில் இன்னும் ஏராளமான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கலாம். மேலும், இணையதளம் மூலம் 2,300 போ் மட்டும் படிவங்களை அளித்துள்ளனா்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப் பணிகளை முடிக்க இன்னும் 10 நாள்களே உள்ளன. கணக்கெடுப்பு படிவத்தைப் பெற்ற வாக்காளா்கள் திரும்ப ஒப்படைப்பது அவா்களின் கடமையாகும். அதனால் வாக்குச் சாவடி அல்லது வாக்குச் சாவடி நிலை அதிகாரி வீட்டுக்கு வரும்போது அந்தப் படிவத்தை ஒப்படைக்க வேண்டும்.
அப்படி ஒப்படைக்காதவா்களின் பெயா்கள் டிசம்பா் 9-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அதன்பிறகு பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் கொடுத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும். வாக்குப் பதிவு அதிகாரியின் ஒப்புதல் அடிப்படையில்தான் அவா்களின் பெயா்கள் இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெறும் என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி ப. ஜவஹா்.
பேட்டியின்போது, துணை தலைமைத் தோ்தல் அதிகாரிகள் பி. தில்லைவேல், எம். ஆதா்ஷ் ஆகியோா் உடனிருந்தனா்.