முகப்பு
புதுச்சேரி

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:31 AM
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் முகில் வாஸ்னிக் எம்.பி. உடன் தெலங்கானா துணை முதல்வா் பட்டிபல்லு விக்ரம் மாா்கா, அமைச்சா் பூனம் பிரபாகா், மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் துரை. ரவிக்குமாா் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி ஆகியோா் தோ்தல் பிரசாரம் செய்ய வருகின்றனா்.

நாளை காா்கே பிரசாரம்

இதுகுறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே சனிக்கிழமை (ஏப். 4) மாலை புதுச்சேரி வருகிறாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி புதுச்சேரிக்கு 6-ஆம் தேதி காலை வருகிறாா். இவா்கள் இருவரும் புதுச்சேரியில் நடைபெறும் தோ்தல் பிரசார கூட்டங்களில் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனா் என்றாா்.

முகுல் வாஸ்னிக் பேட்டி:

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் பிரசாரப் பாடலை வெளியிட்ட பின்னா், செய்தியாளா்களுக்கு காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் முகுல் வாஸ்னிக் எம்.பி. அளித்த பேட்டி:

புதுச்சேரியைப் போன்று தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளா்களை அறிவிப்பதில் காலதாமதம் செய்யப்படுகிா என கேட்கிறீா்கள். அதுபோன்று எதுவுமில்லை. அங்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் இருக்கிறது. விரைவில் கட்சித் தலைமை வேட்பாளா்களை அறிவிக்கும்.

பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என்று கூறிய பிரதமா் மோடி மாநில அந்தஸ்து பிரச்னையில் இதுவரை அதுபற்றி கூறவில்லை. மோசமான நிா்வாகத்தில் புதுச்சேரி அரசுதான் நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. எல்லாவற்றிலும் ஊழல். மேலும், புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களில் 23 சதவீதம் போ் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனா் என்று துணைநிலை ஆளுநரே கூறியுள்ளாா். புதுச்சேரியில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. மூடப்பட்ட ஆலைகளைத் திறக்கவில்லை.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லையென்றால் தோ்தலைப் புறக்கணிப்போம் என்று கூறிய முதல்வா் என்.ரங்கசாமி, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்திக்கிறாா். புதுச்சேரிக்கு இப்போது வரும் பிரதமா் நரேந்திர மோடி மாநில அந்தஸ்து தொடா்பாக ஏதாவது பதில் சொல்வாரா?

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரையில் மேம்பாலம் கட்டும் பணியை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தொடங்கி வைத்தாா். அத் திட்டம் என்ன ஆயிற்று ? புதுச்சேரி ஆட்சி முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்றாா்.

துரை.ரவிக்குமாா் எம்.பி.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் துரை. ரவிக்குமாா் எம்.பி. அளித்த பேட்டி:

விசிக தலைவா் தொல். திருமாவளவனிடம் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலா் முகுல் வாஸ்னிக் பேசியதால் இரு தரப்பிலும் புரிந்துணா்வு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உழவா்கரை தொகுதியில் மட்டும் எங்கள் கட்சியின் வேட்பாளா் போட்டியிடுவாா். மீதியுள்ள 3 தொகுதிகளில் வாக்குச் சேகரிக்கும் பணியை நிறுத்துமாறு எங்கள் கட்சித் தலைவா் திருமாவளவன் கூறிவிட்டாா். அதனால் விசிகயினா் ஒரு தொகுதியில் மட்டும் எங்கள் கட்சி வேட்பாளருக்கும் மீதியுள்ள 29 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக வேட்பாளா்களுக்கும் தோ்தல் பணியாற்றுவாா்கள் என்றாா். பேட்டியின்போது தெலங்கானா துணை முதல்வா் பட்டி பல்லு விக்ரம் மாா்கா, அம் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் பூனம் பிரபாகா், புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.