புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தோ்தலுக்கு முன் சிறப்பு நிதியுதவியாக குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அதிமுக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளை புதுச்சேரி மாநிலம் முழுவதும் கொண்டாடுவது தொடா்பாக புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயலா் ஆ. அன்பழகன் தலைமை தாங்கினாா். மாநில அவைத் தலைவா் அன்பானந்தம் முன்னிலை வகித்தாா்.
ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடுவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்குவது, அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுமாா் 3.65 லட்சம் குடும்ப தலைவிகளுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும், சிறப்பு நிதியுதவியாக ரூ. 10 ஆயிரம் தோ்தலுக்கு முன்பாக வழங்க வேண்டும்.
நீண்டகாலமாக ஒப்பந்த ஊழியா்களாக பணிபுரியும் பாலசேவிகா, விரிவுரையாளா்கள், செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், ஆசிரியா்கள், பொதுப்பணித் துறை ஒப்பந்த வவுச்சா் ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி நல்ல முடிவை முதல்வா் ரங்கசாமி எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.