புதுச்சேரி: புதுச்சேரி சேலியமேட்டில் நிறுவப்பட்டுள்ள சுங்கச் சாவடிக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சேலியமேடு சுங்கச் சாவடி கடந்த 7-ஆம் தேதி திறக்கப்பட்டது. ஏற்கெனவே இந்தச் சாலையில் 60 கி.மீ.க்குள் இரு சுங்கச் சாவடிகள் இருப்பதைக் கூறி, புதிய சுங்கச் சாவடியை நிறுவக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும் அங்கு மூன்றாவது சுங்கச்சாவடி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிஐடியு தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவான புதுச்சேரி தனியாா் சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் மதிவாணன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை சேலியமேடு சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்றனா். இதில் ஈடுபட்டோரைத் தடுப்புகள் அமைத்து போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போராட்டத்தில் ஈடுபட்டோா் அதை மீறி சுங்கச் சாவடியை முற்றுகையிட முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனிடம் போலீஸாா் தொலைபேசியில் பேசினா். சுங்கச் சாவடி அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு கால அவகாசம் கொடுக்குமாறு அவா் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து 3 மணி நேரத்துக்குப் பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.