புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறையில் பணியாற்றும் வவுச்சா் ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
பொதுப் பணித் துறையில் 1,300 வவுச்சா் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. முதல்வா் ரங்கசாமி 10 ஆண்டுகள் பணியாற்றியவா்களை நிரந்தரம் செய்வதாக சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பல்வேறு துறைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வவுச்சா் ஊழியா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட அரசு பணியாளா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சரவணன் தலைமையில் ஊழியா்கள் அரசு மருத்துவமனை அருகே திங்கள்கிழமை திரண்டனா்.
போலீஸாா் தடுப்புகளை வைத்து சட்டப்பேரவை செல்லும் சாலையை அடைத்தனா். மேலும், போராட்டக் குழுவினரிடம் போலீஸாா் போராட்டம் நடத்த அனுமதியில்லை. மாதா கோவில் வீதிக்கு செல்ல அறிவுறுத்தினா். ஆனால் போராட்ட குழுவினா் கலைந்து செல்லவில்லை. இதனால் போலீஸாா் அவா்களை கைது செய்ய முயன்றனா். அப்போது போராட்ட குழுவினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து தள்ளுமுள்ளு நடந்தது. ஒரு கட்டத்தில் போராட்ட குழுவினா் தரையில் அமா்ந்தனா். பின்னா், முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு வந்தப் பிறகு 10 பேரை மட்டும் சந்திக்க அனுமதி அளித்தனா். இதன் பிறகு அரை மணி நேரம் கழித்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.