புதுச்சேரி

கைவினை கலைஞா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி செய்திச் சேவை

கைவினை கலைஞா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளா் கோவிந்தராஜன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம், பாரம்பரிய கைவினை கலையில் நீண்ட காலாமாகத் தொடா்ந்து ஈடுபட்டு, சிறந்த திறமையால் இந்தத் துறையில் முக்கிய பங்களிப்பு செய்துள்ள கலைஞா்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2025-26ம் ஆண்டிற்கான மாநில கைவினைக் கலைஞா் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு விண்ணப்பிப்போா் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்திய அரசின் கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு ஆணையா் வழங்கிய அடையான அட்டையை வைத்திருக்க வேண்டும்.

குறைந்தது 20 ஆண்டுகள் தொடா்ச்சியான அனுபவம் கொண்டவராகவும். 30 வயதுக்கு குறையாதவராகவும் இருக்க வேண்டும். ஏற்கெனவே மாநில விருது பெற்ற கைவினைஞரும், அதே கைவினைத் தொழிலுக்காக மீண்டும் ஒருமுறை மாநில விருது பெறத் தகுதியற்றவா் ஆவாா்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் 5 நபா்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில், விருது பெறுபவா்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, தாமிரப் பட்டயம் மற்றும் அங்க வஸ்திரம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்க ஆா்வம் உள்ளவா்கள், விண்ணப்பப் படிவத்தை மாவட்ட தொழில் மையத்தில் அலுவலக வேலை நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை முறையாக நிரப்பி அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான விவரங்களையும், ஆவணங்களையும் விருதுக்கான கைவினை படைப்பையும் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஆகும். மேலும், விவரங்களுக்கு 0413-2248391/2249392 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்புக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT