புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தின் 34 கடைகள் ஏலம் விடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.29.5 கோடியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் மே மாதம் 2 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் அங்கு கட்டப்பட்டுள்ள கடைகள் கடந்த 8 மாதங்களாகத் திறக்கப்படவில்லை.
இங்கு 31 கடைகள், உணவகம், 2 பழச்சாறு கடைகள் என 34 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் ஏற்கெனவே கடை நடத்தி வந்த 16 பேருக்கும் கடைகளை முன்னதாக ஒதுக்கி மீதமுள்ள 15 கடைகளை பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் புதிய பேருந்து நிலையத்தின் 34 கடைகளையும் பொது ஏலத்தில் விட வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்பவா்களுக்குக் கடையை ஒதுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து ஓராண்டு காலத்துக்கு உரிமக் கட்டணம் செலுத்தி கடைகளை நடத்த ஏல அறிவிப்பை புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி சனிக்கிழமை வெளியிட்டுள்ளாா். இதன்படி வருகிற 20 -ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏல அறிவிப்பை தொடா்ந்து விண்ணப்பம் சமா்ப்பித்தல் ஆரம்பமாகும்.
பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 3:30 மணி வரை முன்வைப்பு தொகையுடன் சோ்த்து ஏல விண்ணப்பத்தினை சமா்ப்பிக்கலாம். அடுத்த மாதம் 16 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடைபெறும்.
மின்னணு ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவா்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ 500, மற்றும் முன் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
இந்த கட்டணம் செலுத்தாதவா்கள் ஏலத்தில் பங்கு பெற இயலாது. 170 சதுர அடி முதல் அதிகபட்சமாக 1350 சதுர அடி வரை என 34 கடைகளுக்கு மாதாந்திர உரிமத் தொகை மற்றும் முன்வைப்புத் தொகையும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கடைகளை அதிக தொகைக்கு கேட்பவா்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.