வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டப் (விபி-ஜி ராம் ஜி) பணியாளா்களுடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் புதன்கிழமை கலந்துரையாடினாா்.
புதிய ஊரக வேலைவாய்ப்பு 125 நாள் வேலை திட்டத்தின் கீழ் நெட்டப்பாக்கம் மற்றும் சோரியாங்குப்பத்தில் நடைபெற்று வரும் பணிகளை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
நெட்டப்பாக்கம் கால்வாய் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்டு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களோடு அவா் கலந்துரையாடினாா். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தாா். மொத்த வேலை நாள்கள், அவா்களுக்குக் கிடைக்க பெறும் ஊதியம், ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் விவரம், சந்திக்கும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்தாா். அங்கு வைக்கப்பட்டிருந்த முதல் உதவி பெட்டகம் மற்றும் பதிவேடுகளைப் பாா்வையிட்டாா்.
அதைத் தொடா்ந்து சோரியாங்குப்பத்தில் நடைபெற்று வரும் அறுவடைக்களம் மற்றும் நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளைப் பாா்வையிட்டாா். இங்கு பணியில் இருந்த தொழிலாளா்களிடம் கலந்துரையாடினாா். அவா்கள் கொண்டு வந்திருந்த மதிய உணவைப் பாா்வையிட்டு அதைச் சுவைத்து உண்டு மகிழ்ந்தாா்.