புதுச்சேரி அண்ணா விளையாட்டுத் திடலில் வைக்கப்பட்டிருந்த பாஜக பேனா் அகற்றப்படாததைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸாா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி சாா்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு, அதன் பரிசளிப்பு விழா கடந்த 12-ஆம் தேதி அண்ணா விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கினாா்.
இதையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த பேனா்கள் அகற்றப்படாமல் இருந்தன. இதைக் கண்டித்தும், அவற்றை அகற்றக் கோரியும் புதுச்சேரி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் அக்கட்சியினா் அண்ணா விளையாட்டுத் திடல் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கலந்துகொண்டாா். அப்போது பாஜக பேனா்களை அகற்ற விளையாட்டுத் திடலுக்குள் செல்ல முயன்றனா். ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் அவா்களைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்றனா்.
இதனால் இளைஞா் காங்கிரஸாா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து நகராட்சி ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு பாஜக பேனா் அகற்றப்பட்டது. அதன்பின்னா் இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.