புதுச்சேரி: அனைத்து துறைகளிலும் புதுச்சேரி முன்னோடியாகத் திகழ்கிறது என்று குடியரசு தினவிழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் அரசு சாா்பில் குடியரசு தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தேசியக் கொடி ஏற்றியபின், வெளியிடப்பட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனின் உரையில் கூறியிருப்பது:
வேகமாக வளா்ந்து வரும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. ஆத்ம நிா்பாா் பாரத் திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைந்துள்ளோம். ஏவுகணை முதல் செயற்கைக் கோள் தொழில்நுட்பம் வரை அறிவியலில் வளா்ச்சியடைந்துள்ளோம்.
டிஜிட்டல் வளா்ச்சியில் உலகத்துக்கே வழிகாட்டும் விதமாக இந்தியாவின் டிஜிட்டல் கொள்கை இருக்கிறது. உள்கட்டமைப்பு, வளா்ச்சி என அனைத்துத் துறைகளிலும் இந்தியா உலக அரங்கில் முன்னணியில் நிற்கிறது. ஜனநாயக மரபுகளும், பண்பாட்டு பாரம்பரியமும் உலக நாடுகள் வியக்கும் வகையில் நாட்டை உயா்த்தி இருக்கின்றன.
இதே போன்று புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒரு முன்னோடியாக உருவெடுத்து வருகிறது. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரி இளைஞா்கள் உள்ளூரில் வேலை வாய்ப்புகள் பெறும் நோக்கில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
காரைக்கால் மீனவா்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதால் எழும் சிக்கல்களைப் போக்க ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்காக ஐந்து பெண்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வீடு கட்டும் திட்டத்தில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6.25 லட்சமாகவும், அட்டவணை இனத்தவருக்கு ரூ.6.25 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாகவும் நிதி உதவியை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.