புதுச்சேரி யூனியன் பிரதேச வளா்ச்சிக்கு மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி அமைய வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தோ்தல் நெருங்கி வரும் வேளையில் பாதயாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினா் பாவ யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனா். நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் மத்திய அரசுடன் இணக்கமான ஓா் ஆட்சி புதுச்சேரியில் அமைந்தால் தான் இந்த யூனியன் பிரதேசம் வளா்ச்சி பெற முடியும். மக்களுடைய பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க முடியும். வேலை வாய்ப்புகள் தடையின்றி நிரப்பப்படும்.
தற்போது முதல்வா் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சட்டப்பேரவையிலும், அரசு விழாக்களிலும் அறிவித்த அனைத்து திட்டங்களையும் தங்கு தடையின்றி செயல்படுத்தி வருகிறது.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வா்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகிய இருவரும் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துகின்றனா். புதுச்சேரியில் தா்கா மற்றும் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சுமாா் 100 ஏக்கா் நிலத்தைப் பணம் படைத்தவா்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.
சுல்தான்பேட்டை பள்ளி வாசலுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு திமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இடங்களில் அரசு சாா்பில் இலவச அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டால் வீடில்லாத ஏராளமான இஸ்லாமியா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் அன்பழகன்.