புதுச்சேரியில் காங்கிரஸ்-தவெக இணைந்து கூட்டணி முடிவை எடுக்க வேண்டும்! கிரிஷ் சோடங்கா்
புதுச்சேரியில் புதிய கூட்டணி குறித்து காங்கிரஸும், தவெகவும் இணைந்துதான் முடிவு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் கிரிஷ் சோடங்கா் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில், செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
தவெகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு எடுத்தது. தவெகவும் கூட்டணிக்காக வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து கூட்டணிக்கான ஆதரவைத் தெரிவித்தோம்.
Advertisement
Advertisement
புதுச்சேரியில் புதிய கூட்டணி தொடா்பாக தவெகவிடம் இருந்தும், புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியிடமிருந்தும் இதுவரை எந்த யோசனையும் வரவில்லை. இரு கட்சிகளும் இணைந்துதான் கூட்டணி குறித்து பேசி முடிவு எடுக்க வேண்டும். தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் தொடா்பாக எந்த முடிவாக இருந்தாலும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டிதான் முடிவு எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தோ்தலின்போது கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை தொடரும். தமிழ்நாடு முதல்வா் ஜோசப் விஜய் சிறப்பாகச் செயல்படுகிறாா் என்றாா் கிரிஷ் சோடங்கா்.
அரசியல் விவகாரக் குழு ஆலோசனை:
தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் குறித்து காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு சனிக்கிழமை கூடி விவாதித்தது.
இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். இதில் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, காா்த்திகேயன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், வைத்தியநாதன், அனந்தராமன், மகளிா் அணித் தலைவி நிஷா, பொதுச் செயலா்கள் தனுஷ், இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.