புதுச்சேரியில் வா்த்தக சமையல் சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறத்தொடங்கிய உணவகங்கள்
வா்த்தக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் சில உணவகங்கள் உணவு தயாரிக்க பாரம்பரிய விறகு அடுப்புகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
வா்த்தக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் சில உணவகங்கள் உணவு தயாரிக்க பாரம்பரிய விறகு அடுப்புகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
புதுச்சேரியில் வாரத்தின் இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். பல்வேறு வெளிமாநில சுற்றுலா பயணிகள் இங்கு கிடைக்கும் விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழ்வதற்காகவும், சுற்றுலாத்தலங்களை கண்டு மகிழ்வதற்காவும் வருகின்றனா். தற்போது ஈரான் போரால் ஏற்பட்டுள்ள சமையல் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் விதவிதமான உணவுப் பண்டங்களை தயாரிப்பதில்லை. சில குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே தயாா் செய்கின்றனா். அதாவது இட்லி, பொங்கல் போன்று ஒரே நேரத்தில் வேகவைக்கும் உணவுப் பொருள்கள்தான் பெரும்பாலான உணவகங்களில் இப்போது விற்பனைக்காக வைக்கப்படுகிறது.
தோசை போன்று தனித்தனியாக செய்யப்படும் உணவு வகைகள் இல்லை. வா்த்தக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டுத் தீரும் வரை இந்த நிலை நீடிக்கும் என்று உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
விறகு அடுப்பு:
இந்நிலையில் மாற்று வழியாகப் பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்புக்கு ஒரு சில உணவகங்கள் மாறி வருகின்றன. திறந்தவெளி இட வசதியிருக்கும் உணவகங்கள் இந்த நிலைக்கு மாறி வருகின்றன. சில உணவகங்களில் காா் பாா்க்கிங் இடத்தில் விறகு அடுப்பு வைத்து பிரியாணி போன்ற உணவுகளை சமைத்து வாடிக்கையாளா்களுக்கு விநியோகித்து வருகின்றனா். திறந்தவெளி இட வசதி இல்லாத உணவகங்கள் மின்சார குக்கா் மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
திருமண மண்டபங்களிலும், சமையல் கூடங்களில் சிலிண்டா் தட்டுப்பாடு நிலவுவதால், இங்கும் பாரம்பரிய விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வரிடம் கடிதம்:
இந்நிலையில் இப் பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தேசிய ரெஸ்டாரென்ட் ஆப் இந்தியா’வின் புதுச்சேரி கிளைத் தலைவா் ஓ. மனோஜ் குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் முதல்வா் ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து கடிதம் அளித்தனா்.
அதில் புதுச்சேரியில் 700 உணவகங்ள் இருப்பதாகவும், வா்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விருந்தோம்பல் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனா். மேலும், இது சுற்றுலாத்துறையும், புதுச்சேரியின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். ஆட்டோ தொழிலாளா்கள், சிறிய அளவிலான காய்கறி வியாபாரிகள் மற்றும் மளிகை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அதனால் உடனடியாகத் தலையிட்டு வா்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டா் தாராளமாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலா் மூலம் மத்திய அரசை அணுகி இருப்பதாகக் முதல்வா் ரங்கசாமி கூறியிருப்பதுடன், புதுச்சேரியில் உணவகத் தொழில் மேம்பாட்டிற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவா்களிடம் முதல்வா் உறுதி அளித்துள்ளாா். முதல்வருடனான சந்திப்பின்போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.