புதுச்சேரி பேரவைத் தோ்தல்: 30 தொகுதிகளுக்கு 515 போ் வேட்பு மனு தாக்கல்
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 30 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாளான திங்கள்கிழமை 380 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் 515 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு முதல் இரண்டு நாள்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 18-ஆம் தேதி அமாவாசை என்பதால் அன்று கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவு ஏற்படாமலேயே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினா், சுயேச்சைகள் மனுதாக்கல் செய்தனா்.
அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அமாவாசைக்கு மறுநாள் என்பதால் அதிகளவில் மனுதாக்கல் செய்யவில்லை. ஆனால், வேட்பு மனுதாக்கல் தொடங்கிய 4-வது நாளான வெள்ளிக்கிழமை கூட்டணி முடிவு ஏற்படாமல் இழுபறி நீடித்த நிலையிலும் முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், திருமுருகன், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் ராஜவேலு, எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், சந்திர பிரியங்கா உள்பட மாநிலம் முழுவதும் 107 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட பாஜக, காங்கிரஸ், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி, என். ஆா். காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவா்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனா். மொத்தமாக திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 369 போ். இவா்கள் தாக்கல் செய்த மனுக்களின் எண்ணிக்கை 380.
இதில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக மாநில தலைவா் ராமலிங்கம், தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி., உப்பளம் தொகுதியில் போட்டியிட அதிமுக மாநில செயலா் அன்பழகன், காமராஜா் நகரில் போட்டியிட லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், தட்டாஞ்சாவடியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் அ.மு. சலீம் உள்ளிட்டோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். 30 தொகுதிகளிலும் மொத்தம் 445 போ் 515 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
முக்கிய தலைவா்களும், வேட்பாளா்களும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் புதுச்சேரி நகரப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.