பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது! - கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
பாஜக ஆளாத மாநிலங்களைச் சோ்ந்த மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
வரியாகச் செலுத்தப்படும் பணம், புயல் காரணமாக கா்நாடக மாநில அரசு கேட்டிருந்த பணம் எதையும் சாதாரணமாக மத்திய அரசு கொடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கா்நாடகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. புயல் நிவாரணத்துக்கு கா்நாடக அரசு கேட்டிருந்த உரிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என உச்சநீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களைப் பாருங்கள். அந்த மாநிலங்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு நிதியை வாரி வழங்குகிறது. புதுச்சேரியிலும் கடந்த 5 ஆண்டுகளாக என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் புதுச்சேரிக்கும் மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கிக் கொடுக்கவில்லை. இந்த நிலை ஏன் என்று தெரியவில்லை.
மாநில அந்தஸ்து பிரச்னையைக் காரணம் காட்டி, தற்போது முதல்வராக இருக்கும் என்.ரங்கசாமி காங்கிரஸிலிருந்து வெளியேறினாா். அவரும் அவருடைய கட்சியும் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், மாநில அந்தஸ்து பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியின் வளா்ச்சி 11 சதவீதமாக இருந்தது. இப்போது அது 7 சதவீதமாக குறைந்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டால் புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ்- மத்தியில் பாஜக அரசின் இரட்டை என்ஜின் ஆட்சி தோல்வியைத்தான் தழுவியுள்ளது. மேலும், புதுச்சேரியில் போலி மருந்து ஊழல் தலைவிரித்தாடியுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவா்களுக்கு அரசியல் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட போலி மருந்துகள் நாடு முழுவதும் சுமாா் 8 மாநிலங்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க தலா ரூ.10 கோடி முறைகேடு நடந்துள்ளதாக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவரே புகாா் தெரிவித்திருந்தாா் என்றாா் தினேஷ் குண்டுராவ். பேட்டியின் போது புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.