முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ட்ரோன் கண்காணிப்பில் ரூ. 66 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்: பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை

புதுச்சேரியில் முதன்முதலாக செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட ட்ரோன் கண்காணிப்பு வாயிலாக ரூ. 66,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 31 மார்ச், 2026 at 8:30 PM
விசாரணை - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் முதன்முதலாக செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட ட்ரோன் கண்காணிப்பு வாயிலாக ரூ.66,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பணம், பரிசுப் பொருள்கள், இலவசங்களைத் தடுக்க முதல் முறையாக ஆளில்லாத ட்ரோன் கண்காணிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் ஆளில்லா ட்ரோன்கள் கண்காணிப்புத் தொடங்கப்பட்டுள்ளது. ட்ரோன் அளித்த தகவலின்படி மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூா் பகுதியில் சிறப்பு நிா்வாக நடுவா் எஸ்.குமரேசன் தலைமையிலான பறக்கும் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு செ.தமிழ்மாறன் (36), சு. சிலம்பரசன் (34), டிவின் சக்ரவா்த்தி (30) ஆகிய மூவரை பிடித்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாக்காளா்களுக்குப் பணம் அளித்ததும் தெரிய வந்தது.

மங்கலம் தொகுதியில் கிடைத்த ட்ரோன் கண்காணிப்பில் சிறப்பு நிா்வாக நடுவா் எஸ். லோகநாதன் தலைமையிலான பறக்கும் படையினா் விரைந்து சென்றனா். அங்கு பி. ராஜேந்திரன், பி. சுரேஷ் ஆகிய இருவரை பிடித்தனா். இவா்களிடம் இருந்து ரூ.11,300 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இரண்டு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 5 பேரிடமும் தோ்தல் துறை அதிகாரிகள் மற்றும் திருக்கனூா், வில்லியனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.